Welcome to this Blog

OM NAMA SHIVAYA . Hearty Welcome to This Blog. This is a Blog to Share Some of My Thoughts & Informations with You.You Know " Opinion Differs ".Thank You For Your Patience.

04 February 2018

குழந்தைகளின் உலகம்...

#குழந்தை வளர்ப்பு

குழந்தைகளின் உலகம் மிகவும் அழகானது. அன்பினால் உருவானது.அவர்களுக்கு நடைமுறை வாழ்வின் சட்ட திட்டங்களும், நுணுக்கங்களும் தெரியாது.அவர்களை கையாளும்பொழுது, மிகுந்த “பொறுமையும்,பேரன்பும்” மிக அவசியம்.அதற்கு நாம் பல தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதில் மிக சில;

1. நமது உடல் மற்றும் மன ஆரோக்யம்
2. எதிர்பார்ப்பில்லாமை.
3. அன்பின் மொழி கொண்டு பேசுங்கள்

நமது #ஆரோக்யம் :

நமது மன ஆரோக்யம் மற்றும் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்க வேண்டும்.அதனை பேணுவதால் “பொறுமை” என்னும் செல்வத்தை நாம் பெற முடியும்.

எதிர்பார்ப்பில்லாமை:

குழந்தைகள் நாம் சொல்வதை உடனே புரிந்து கொண்டு,நடந்து கொள்ள வேண்டும், நாம் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறு. அவர்கள் நம் வழியாக பிறந்திருக்கலாம்.அதற்காக அவர்கள் சுதந்திரம் அற்றவர்கள் என்று கூற இயலாது.அவ்வாறு கூறுவதும் எதிர்பார்ப்பதும் நமது மடமையே. நம் கட்டளைகளையெல்லாம் புரிந்து கொண்டு செயல்படுவதற்கு அவர்கள் கணிப்பொறி அல்ல, நம்மைப் போன்றே அவர்களும், சுதந்திரத்தை விரும்பும் சுதந்திர மனிதர்கள் தான்.

அன்பின் மொழி கொண்டு பேசுங்கள்:

குழந்தைகளின் உலகம் அன்பினால் உருவானது.அவர்களிடம் அதிர்ந்து பேசலாகாது.மனம் வாடி வெதும்பி விடுவார்கள்.கண்டிப்பு அவசியம்தான்.அதை எப்பொழுது ப்ரயோகப்படுத்த வேண்டும், எவ்வாறு ப்ரயோகப்படுத்த வேண்டும் என்ற வித்தை தெரிந்து இருக்க வேண்டும்.பூ வினை பறிக்க கோடரி பயன்படுத்தலாமோ?.குரலில் மென்மையும், உள்ளத்தில் அன்பும், புத்தியில் தெளிவும், குணத்தில் பொறுமையும் கொண்டு, அவர்களிடம் உரையாட வேண்டும். நமது குரலின் த்வனியும், முக பாவனையும் மிக முக்கியம். குழந்தைகள் அதை மிக முக்கியமாக கவனிப்பார்கள்.குரலில் இனிமையும், முகத்தில் கனிவும், உள்ளத்தில் பேரன்பும் இருப்பது அதி முக்கிய தகுதி. மொத்தத்தில், அன்பின் மொழி கொண்டு பேசுங்கள்.

அனைத்திற்கும் மேலாக, அவர்கள் நம்மை திருத்த இறைவனால் அனுப்பப்பட்டவர்கள். நமது கோபம்,பொறுமையின்மை,சுய நலம், தியாகமின்மை, திமிர், விட்டுக்கொடுக்காத தன்மை, போன்ற பல தீய குணங்களை சரி செய்ய இறைவனால் நம் வழியாக அனுப்ப பட்டவர்கள். இதனை உணர்ந்து நடந்தால், பேரழகு கொண்ட அன்பின் உலகத்தை ஆனந்தமாக அனுபவிக்கும் தகுதி நமக்கு வந்து விடும்.

என்றும் அன்புடன்,

சிவ. செந்தில் ஆறுமுகம்.

No comments: