Welcome to this Blog

OM NAMA SHIVAYA . Hearty Welcome to This Blog. This is a Blog to Share Some of My Thoughts & Informations with You.You Know " Opinion Differs ".Thank You For Your Patience.

05 August 2009

Some of the Songs From "Thiruvegamba Maalai" by Pattinathar

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே.

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமித் துர்ப்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா, கச்சியேகம்பனே.

சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சியு மாகிக் கொடுமையினால்
பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங்கரைகண்டி லேன், இறைவா, கச்சியேகம்பனே.

வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார் வழக்குரைப்பர்;
தீதுக் குதவியுஞ் செய்திடுவார், தினந்தேடி ஒன்று
மாதுக் களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா, கச்சியேகம்பனே.

பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா ! கச்சியேகம்பனே.

கல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் கனவிலும்மெய்
சொல்லார், பசித்தவர்க் கன்னங் கொடார், குருசொன்னபடி
நில்லார், அறத்தை நினையார், நின்நாமம் நினைவில்சற்றும்
இல்லா ரிருந்தென்? இறந்தென்? புகல், கச்சியேகம்பனே.

ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த
பீற்றற் து ருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனே.

முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற்கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளையோலை விளக்கியிட்டுப்
பட்டப் பகலில் வெளிமயக் கேசெயும் பாவையர்மேல்
இட்டத்தை நீதவிர்ப்பாய் இறைவா, கச்சியேகம்பனே.

 பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகிப் புன்மாதருக்குள்
பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடியப் பாவையர்க்கீந்து
இறந்திடவோ பணித்தாய் இறைவா, கச்சியேகம்பனே.

நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே.

பொன்னைநினைந்து வெகுவாகத் தேடுவர், பூவையன்னாள்
தன்னைநினைந்து வெகுவாய் உருகுவார், தாரணியில்
உன்னை நினைந்திங் குனைப்பூசியாத உலுத்தரெல்லாம்
என்னையிருந்து கண்டாய் இறைவா; கச்சியேகம்பனே

 நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே

கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார்; மயானங் குறுகியப்பால்
எட்டி யடிவைப்ப ரோ? யிறைவா ! கச்சியேகம்பனே.


அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?

No comments: